×

டெஸ்லா கார் நிறுவன தலைவர் எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்திக்காமல் சீன பிரதமரை சந்தித்தது சிந்திக்க வேண்டிய விஷயம் : ப.சிதம்பரம்

சென்னை : டெஸ்லா கார் நிறுவன தலைவர் எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்திக்காமல் சீன பிரதமரை சந்தித்தது சிந்திக்க வேண்டிய விஷயம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தனது புதிய கார் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு இருந்த டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், கடந்த வாரம் இந்திய பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்தியா புறப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக தனது பயணத்தை ரத்து செய்த மஸ்க், நடப்பாண்டின் பிற்பகுதியில் இந்தியா வரும் வாய்ப்பினை எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தேர்தல் நேரத்தில் தனது வருகை அரசியல் ஆக்கப்படலாம் என்பதால் எலான் மஸ்க் தனது பயணத்தை கைவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் நேற்று முன்தினம் சீனாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட மஸ்க், அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சம்பவம் இந்தியாவில் பல விவாதங்களை எழுப்பியுள்ளது.

இது குறித்து ப.சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில், “டெஸ்லா கார் கம்பெனியின் அதிபர் எலான் மஸ்க் இந்தியாவுக்கு வருவதற்கு நாள் குறித்திருந்தார். பிரதமர் மோடியுடன் பேசிய பிறகு இந்தியாவில் கார் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலையை அமைக்கும் முடிவை மஸ்க் அறிவிப்பார் என்று அரசு எதிர்பார்த்தது கடந்த வாரம் தன் இந்தியா பயணத்தை நாள் குறிப்பிடாமல் மஸ்க் ஒத்திவைத்தார். டெஸ்லா கம்பெனியின் “அவசர வேலைகளால்” பயணம் ஒத்தி வைக்கப்பட்டது என்று காரணம் சொல்லப்பட்டது

ஆனால், நேற்று மஸ்க் சீனாவுக்குச் சென்றார், சீனப் பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். டெஸ்லா கம்பெனியின் நவீன ஓட்டுநனர் இல்லாத காரை சீனாவில் தயாரிப்பது பற்றி இருவரும் பேசினார்கள் என்று அறிவிக்கப்பட்டது. சீனாவில் மிகப் பெரிய கார் தொழிற்சாலையை மஸ்க் அமைப்பார் என்று நம்பப்படுகிறது.இந்தியப் பயணத்தை ஒத்திவைத்து மஸ்க், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது எதைக் காட்டுகிறது? பிரதமர் மோடியைச் சந்திக்காமல் சீனப் பிரதமரைச் சந்தித்தது எதைக் காட்டுகிறது? இவை சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவா?” என்று ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

The post டெஸ்லா கார் நிறுவன தலைவர் எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்திக்காமல் சீன பிரதமரை சந்தித்தது சிந்திக்க வேண்டிய விஷயம் : ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : Tesla Car Company ,Elon Musk ,PM Modi ,P. Chidambaram ,Chennai ,Senior ,Congress ,Modi ,India ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்